மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பிலிருந்தே பாஜகவுக்கும், திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானது. 42 மக்களவை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
இதனைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி காரில் சென்றபோது சாலையில் நின்று கொண்டிருந்த சிலர் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டுள்ளனர். இதனை கண்டு கோபமடைந்த மம்தா அவர்களை அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாஜக பிரமுகர் அர்ஜுன் சிங், " 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டதால் 10 பேரை மம்தா கைது செய்துள்ளார். தற்போது நாங்கள் 10 லட்சம் தபால் அட்டைகளில் 'ஜெய் ஸ்ரீராம்' என எழுதி அவருக்கு அனுப்ப உள்ளோம். முடிந்தால் 10 லட்சம் பேரை அவர் கைது செய்யட்டும். அவர் மனதின் சமநிலையை இழந்து செயல்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.