திருநெல்வேலி: அமரன் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மக்களின் வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளில் வசூலைக் குவித்து வருகிறது. இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், திரையரங்கத்திற்கு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கையில் பெட்ரோல் குண்டுடன் வந்துள்ளனர்.
அவர்கள் மூன்று பெட்ரோல் குண்டை தியேட்டர் முகப்பு வாசலில் வீசிவிட்டு சென்றது, அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் (சிசிடிவி) பதிவாகி இருக்கிறது. இதனால், அந்த இடத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
குறிப்பாக, சில சமுதாயக் குழுக்களால் இப்படத்தில் அவர்களின் மதத்தை தவறாக சித்தரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக சில மாநகர பகுதியில் உள்ள திரையரங்குகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க |
இந்நிலையில், இன்று காலை மூன்று மணி அளவில் அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தில் வந்து மூன்று பெட்ரோல் குண்டு வீசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தியேட்டர் மற்றும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராப் பதிவுகளை கைப்பற்றி, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் மேலப்பாளையம் பகுதி முழுவதும் ஒரு பதட்டமான சூழல் காணப்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.