சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள கடந்த டிசம்பர் 28ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.
அப்போது, கமல்ஹாசனுக்கு நெருங்கமாக இருந்து வருபவரும், தற்போதைய திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான வீரசக்தியின் நண்பரான லோரோன் மொரைஸ் என்பவருக்குச் சொந்தமான தனியார் குடியிருப்பு வளாகத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கப்பட்டது. இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொழிலதிபரான லோரோன் மொராய்ஸ், செப்கோ பிராப்பர்டீஸ் என்ற பெயரில் வீடு கட்டி விற்பனை செய்து வருகிறார். இவர், வருமானத்தைக் குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இச்சூழலில், நேற்று (மார்ச் 23) திடீரென திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள லொரோன் மொராய்ஸ்க்குச் சொந்தமான 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், வீடு கட்டி விற்பனை செய்து வரும் மொரைன் சிட்டி இடத்திலும், தென்றல் நகரில் உள்ள லொரோன் மொரோய்ஸ்க்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் லோரோன் மொராய்ஸ் வீடு கட்டி விற்பனை செய்ததில் முறையான வரி கட்டாமல் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்தது தெரியவந்தது. நேற்று முழுவதும் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பல முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக வருமான வரித் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.