சென்னை, ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ’’சட்ட ஒழுங்கைப் பேணிக்காப்பதில் தமிழ்நாடு தான் முதல் மாநிலம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது.
மூன்று லட்சம் 500 கோடி ரூபாய் முதலீட்டாளர் மாநாட்டில் முதலீடாக ஈர்க்கப்பட்டு 304 தொழிற்சாலைகள் அமைய உள்ளன. இதன்மூலம், ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். திமுக ஆட்சிக் காலத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அதன் பின் அதிமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு வளர்ந்து முதன்மை மாநிலமாக உள்ளது. போஜராஜன் ரயில்வே சுரங்கப் பாதை விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தங்கசாலை பாலத்திற்கு கீழ் ஒன்பது கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
காசிமேட்டில் மீனவர்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் மார்க்கெட் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் 155 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் மேம்படுத்தப்படும். இதனால் 300 மீன்பிடி படகுகள் நிறுத்தப்படும். வீடுகள் இல்லாத மீனவர்களுக்கு கான்கிரீட் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும்.
அதுமட்டுமல்லாமல், விசைப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் 18 ஆயிரத்தில் இருந்து 20,000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும். பின்னர், டீசல் மானியம் நான்காயிரம் லிட்டரிலிருந்து ஐந்தாயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை ஐந்தாயிரத்திலிருந்து 7500ஆக உயர்த்தி வழங்கப்படும். மீனவர்களுக்கு எளிதில் கடன்பெற வசதியாக தனியாக மீன்வள வங்கி உருவாக்கப்படும். விபத்தில் இறந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகை இரண்டு லட்சத்தில் இருந்து உயர்த்தி ஐந்து லட்சமாக வழங்கப்படும். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:அனில் தேஷ்முக் மீது புகார்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை