திருப்பத்தூர்: இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் விதிமுறைகள் குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து தேர்தல் துறைசார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர். அப்போது, “தேர்தல் துறைசார்ந்த அலுவலர்களுக்கு நகராட்சி பேரூராட்சி போன்ற பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் இடங்களில் விளம்பரங்கள் செய்வது சுவரொட்டி ஒட்டுவது சுவர்களில் எழுதுவது கூடாது.
கிராமப்புறங்களிலுள்ள தனியார் கட்டடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்யச் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளரிடம் அனுமதி பெற்ற பின்னரே விளம்பரம் செய்ய வேண்டும். தேர்தல் பரப்புரைகளைச் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெற்ற பின்னர் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைக் கொண்டு பரப்புரை செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து உரிமம் பெற்றுள்ள துப்பாக்கி உரிமையாளர்கள், அதை வைத்திருக்கவும், எடுத்துச் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளதால், அவரவர் காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” போன்ற தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் ஆகிய இடங்களுக்கு நான்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்து அவர்களுடைய அலைபேசி எண் மற்றும் தொலைபேசி எண்கள் பகிரப்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் பேசுகையில், “முதலில் தேர்தல் பணிகள் குறித்த பயிற்சிகளை நாம் செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பிறகு, விவி பேடில் உள்ள பேட்டரியை தனியே கழட்டி எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்குத் தபால் ஓட்டுகளை ஏற்படுத்தித் தரவேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையம் நமக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக நாம் கடைப்பிடித்து, இந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பேசுகையில், இந்த தேர்தல் நடைமுறைகளைக் கிராம நிர்வாக அலுவலர்களால் மட்டுமே முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும். வாக்குப்பதிவு நடைபெறும் பொழுது வாக்காளர்களை யாரும் பணம் கொடுத்தோ அல்லது வாக்கு சேகரித்தோ தவறாகப் பயன்படுத்தக் கூடாது போன்ற கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.