திருவாரூர்: நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதுகலை பட்டதாரியான 26 வயதுடைய பெண் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள பாத்திமா பர்ஹானா நம்மிடம் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “மக்களின் அடிப்படை குறைகளைக் கேட்டறிந்து வருகிறேன். நாம் தமிழர் கட்சியின் சீரிய கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துரைப்பேன். வெற்றி தோல்வி குறித்து எனக்குக் கவலை இல்லை; மக்கள் சேவை ஒன்றே என் குறிக்கோள்” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி திராவிட கட்சிகளும், அதனுடைய கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களைக் களமிறக்கி தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இச்சூழலில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரிசமமாக 50 விழுக்காடு இடங்களில் பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளார். இதில் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொள்ளையைச் சேர்ந்த பாத்திமா பர்ஹானா களமிறக்கப்பட்டுள்ளார்.
தனது பள்ளிப்படிப்பைச் சென்னையிலும், பின்னர் இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டத்தினை சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்றுள்ளார். கல்லூரியில் பயிலும் போதே, “யூத் ரெட் கிராஸ்” அமைப்பில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருக்கு அரசியல் மீது அதிக ஆர்வம் இருந்ததால், பல்வேறு மக்கள் சேவைகளைச் செய்து வருகிறார்.
இவருடைய தந்தையான ஷாகுல் ஹமீது, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது தந்தையின் இறப்பிற்குப் பின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தெரிவித்தவுடன், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து நான்கு நாட்களாக நன்னிலம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வயதில் போட்டியிடும் வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.