சென்னை: பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க தொகுதி மக்களிடையே கீழ்க்கட்டை பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, “திரைப்படம் நட்சத்திரம்போல ஸ்டாலின் தன்னை மக்கள் முன் காட்டிக்கொள்ள முயலுகின்றார். மக்களோடு மக்களாக வாழ்ந்தால் மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியும். மக்களை ஏமாற்றி சூழ்ச்சி செய்து ஆட்சிக்கு வர நினைக்கின்றார் ஸ்டாலின்.
ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா என்று இப்போதே ஸ்டாலின் மிரட்டுகின்றார். மக்களெல்லாம் பீதியில் இருக்கின்றார்கள். திமுக ஆட்சிக்கு வந்துவிடுமோ என்று. இதைத் தடுக்க வேண்டும் என்றால் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
திண்டுக்கல் லியோனி சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பெண்களை அவதூறாகப் பேசினார். பெண்கள் குறித்து இழிவாகப் பேசியவரை கண்டிக்காமல் இருக்கின்றார் ஸ்டாலின். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் குடும்பப் பெண்கள் எல்லாம் நிம்மதியாக வாழ முடியாது. இதை எல்லாம் எண்ணிப் பார்த்து தாய்மார்கள் வாக்களிக்க வேண்டும்.
பட்டியலின மக்களைக் கொச்சைப்படுத்தி பேசியவர்தான் ஆர்.எஸ். பாரதி. அதிமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். ராணுவ அலுவலர்களிடம் பேசி நிலத்தை வாங்கி அனகாபுத்தூரில் போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்தது அதிமுக ஆட்சியில்தான். பாதாள சாக்கடைத் திட்டம் அனகாபுத்தூர் நகராட்சியில் தொடங்கப்பட இருக்கின்றது.
மேலும், 18 கோடியில் அனகாபுத்தூர் நகராட்சியில் குழாய் அமைத்து குடிநீர்த் திட்டம் வழங்கும் பணி 80 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்லாவரத்திலுள்ள ஏரிகளைத் தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்னும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதிமுகவின் வேட்பாளர்கள் ராஜேந்திரனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படும். நடைபாதை சிறு, குறு தொழிலாளர்களுக்கு வட்டியில்லா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். ரேஷன் பொருள்கள் வீடு தேடி வந்து சேரும்.
இல்லத்தரசிகளுக்கு 1500 ரூபாய் வழங்கப்படும். ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு உருளைகள் (கேஸ் சிலிண்டர்) இலவசமாக வழங்கப்படும்” என்று பேசினார்.