விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆட்சியர் குடியிருப்புக்குச் செல்லும் வழியில், குடிநீர் வடிகால் வாரிய தரைதொட்டி அருகே உள்ள வேப்ப மரம் ஒன்றில் வெயிலுமுத்து என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி அருகே மேலூர் வடபட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வெயிலுமுத்து (31). கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்குள் ஏற்பட்டத் தகராறு காரணமாக, கிருஷ்ணவேணி, தன் கணவர் வெயிலுமுத்து மீது திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில், வெயிலுமுத்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கணவனும் மனைவியும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தனர். கிருஷ்ணவேணி வெயிலுமுத்துவுடன் வாழ முடியாது என்று விவாகரத்து கோரி விருதுநகர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 26) மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக ஆட்சியர் குடியிருப்புக்குச் செல்லும் வழியில், குடிநீர் தொட்டி அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு வெயிலுமுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடனடியாக வந்து உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு சென்றனர்.
வெயிலுமுத்து குடும்பப் பிரச்னையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இறந்தாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என சூலக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பொது கிணற்றில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை