மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இந்திராநகரைச் சேர்ந்தவர் அர்ஷத். இவர் ஜூலை 5ஆம் தேதி, தனது நிறுவனத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரது சகோதரர் கூடுதலாக ரூ.5 லட்சம் தேவை என கூறியிருக்கிறார்.
அதற்காக திருமங்கலத்தைச் சேர்ந்த அவரது நண்பர் பாண்டி என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, நாகமலை புதுக்கோட்டை அருகே பணத்தை பெறுவதற்காக காத்திருந்தபோது, பாண்டி மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் உக்கிரபாண்டி என்ற நண்பர் வட்டிக்கு பணத்தை தருவதற்கான ஆவணத்தை எடுத்துவருவார் என்று அர்ஷத்திடம் கூறியுள்ளனர். அப்போது திடீரென காவல்துறை வாகனத்தில் வந்த காவல் ஆய்வாளர் வசந்தி மற்றும் அவரது ஓட்டுநர் இருவரும், கார்த்திக், பாண்டி, அர்ஷத் வாகனத்தில் ஏற்றியுள்ளார்.
ப்ளான் போட்டு மோசடி
வாகனம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அர்ஷத் கையில் வைத்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் பணத்தை கார்த்திக் பறித்து ஆய்வாளரின் ஓட்டுநரிடம் வழங்கியுள்ளார். இதையடுத்து ரூ.10 லட்சம் ரூபாய் பணம் என்னுடையது என கூறி கேட்ட அர்ஷத் மீது தங்க கடத்தல் வழக்குப் பதிவு செய்வேன் காவல் ஆய்வாளர் வசந்தி மிரட்டியுள்ளார்.
மகளுக்கு பாலியல் தொந்தரவு - காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா!
மேலும், காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்ற சிறிது தூரத்தில் அர்ஷத்தை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு பாண்டி, கார்த்திக் ஆகிய இருவரை மட்டும் காவல் ஆய்வாளர் அழைத்துச் சென்றுள்ளார்.
தொடர்ந்து பணத்தை இழந்த அர்ஷத் காவல் ஆய்வாளரை தொடர்புகொண்ட போது தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு வருவதாகக் கூறிவிட்டு பணத்தை தராமல் மிரட்டி மோசடி செய்துள்ளார்.
சிக்கிய காவல் ஆய்வாளர்
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அர்ஷத் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் அளித்த புகாரையடுத்து நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி, குண்டுபாண்டி, சிலைமான் பகுதியை சேர்ந்த உக்கிரபாண்டி ஆகியோர் மீது பண மோசடி , மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பெண் காவல் ஆய்வாளர் வசந்தி மீது திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞரை தாக்கியதாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.