சென்னை: தாம்பரம் அடுத்த கேம்ப் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடம், விதிகளை மீறி ஊரடங்கின்போது இயங்கி வந்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, அங்கு பயிற்சியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் பயிற்சி வழங்கியுள்ளார். பயிற்சி முடிந்தவுடன் அனைவரும் கிளம்பிய நிலையில், இளம்பெண் ஒருவரை சிறப்பு பயிற்சி இருப்பதாக கூறி பயிற்சிளார் ஆனந்த் காத்திருக்க வைத்திருக்கிறார்.
அங்கிருந்து அனைவரும் வெளியேறிவிட்டதை உறுதி செய்த பிரேம் ஆனந்த், உடற்பயிற்சி கூடத்தின் கதவுகளை மூடிவிட்டு இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான இளம்பெண் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண், அதனை தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில்,’ஊரடங்கு நேரத்தில் எங்கள் நலனுக்காக உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தீர்கள் என பெரும்மதிப்பு வைத்திருந்தேன். நீங்கள் மிகவும் தரம் தாழ்ந்து நடந்துவிட்டீர்கள். எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்ற எண்ணத்தில் இதைப் பதிவிடுகிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கண்ட பயிற்சியாளர் இளம்பெண்ணுக்கு தொடர்பு கொண்டு சமாதானபடுத்த முயன்றுள்ளார்.
அதனையும் சம்பந்தப்பட்ட பெண் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், பயிற்சியாளர் உணர்ச்சிவசப்பட்டு தெரியாமல் தவறாக நடந்து கொண்டதாகவும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாகவும் சமாதான வார்த்தைகள் கூறியதாதக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பயிற்சியாளர், அந்தப் பெண்ணின் கட்டணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும், தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்திற்கு வருமாறும் கூறியுள்ளார். பயிற்சியாளர் தரப்பில் தொடர்ந்து இளம்பெண்ணிடம் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:கரோனா மாதா கோயில் - படையெடுக்கும் மக்கள்!