அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் தாய், மகள் இருவருக்கும் மட்டும் காய்ச்சல் அதிகரித்ததால் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மற்ற நபர்கள் வீட்டு தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ( மே 27 ) தாய், மகள் இருவரும் கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த நிலையில் இரவு 7 .30 மணிக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அவர்களுடைய கிராமம் மருத்துவமனையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பதால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால், கரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணத்தை சொல்லி ஆம்புலன்ஸ் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதையடுத்து, 40 வயதுமிக்க பெண்ணும், அவருடைய மகளும் அங்கிருந்து நடந்தே கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது இளைஞர்கள் இருவர் அவர்களை பின்தொடர்ந்து வந்ததை கண்டு அச்சமடைந்த இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால், தாய் மட்டும் அந்த இளைஞர்களிடம் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்க மகள் அங்கிருந்து கிராமத்திற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் அந்த பெண்ணை இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து கிராம மக்களுடன் சிறுமி தனது தாயை தேடி அலைந்த நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து அவரை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சரைடியோ காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து கரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கும் ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செய்தியாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் - அரசாணை வெளியிட்ட அரசு!