ஹைதராபாத் (தெலங்கானா): கடத்தல் நாடகமாடியதாக இளம்பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராசகோண்டா காவல் துறைக்குட்பட்ட கீசரா காவல் நிலையத்திற்கு 19 வயது இளம்பெண் கடத்தப்பட்டதாக அவசர எண் 100 வாயிலாகத் தகவல் கிடைத்துள்ளது. துரிதமாகச் செயல்பட்டு பெண்ணின் பெற்றோரைத் தொடர்பு கொண்ட காவல் துறையினர், அவர்களிடத்தில் முழு விவரத்தையும் வாங்கிக் கொண்டனர்.
இளம்பெண் கடத்தல்
அதில் பெண்ணின் தாய், “மகள் இரண்டாம் ஆண்டு மருந்தாளுநர் பட்டப்படிப்பு படித்துவருகிறார். அவர் கல்லூரி பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு வருவதற்காக ராம்பள்ளி எக்ஸ் சாலையிலிருந்து ஆட்டோவில் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் என் அலைபேசிக்கு அழைத்தவர், ஆட்டோ ஓட்டுநர் தனது நிறுத்தத்தில் இறக்கி விடாமல், வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்வதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தார். பின்னர், இங்கிருந்து நான் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த தகவல்களைக் கொண்டு, அனைத்து சோதனைச் சாவடி காவலர்கள் விழிப்புடன் இருக்கவும், வாகனத் தணிக்கையில் ஈடுபடக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். களத்தில் இறங்கிய காவல் துறை, பெண்ணின் தொடர்பு எண்ணைக் கொண்டு அவர் எங்கிருக்கிறார் எனக் கண்டறிந்துள்ளனர். வெறும் இரண்டு மணிநேரத்தில் தேடுதல் வேட்டையை நடத்திய காவல் துறையினர் அதில் வெற்றி கண்டுள்ளனர்.
பெண் மீட்பு
மயக்கமடைந்து ஆடைகள் கலைந்த நிலையிலிருந்த பெண்ணை மீட்ட காவல் துறையினர், அவரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும், தன் தாயிடம் கூறிய அதே தகவலைத் தான் அவர் கூறியுள்ளார். சம்பவம் குறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பெண்ணை கடத்திச் சென்ற ஆட்டோ ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடினர்.
பெண் ஆட்டோ ஏறிய இடம் முதல் அதனைச் சுற்றியுள்ள 100 கண்காணிப்புப் படக்கருவிகளின் பதிவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட அவர்கள், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் உதவியையும் நாடினர். தொடர்ந்து ஆட்டோ எண்ணைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நபரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
வெளிச்சத்துக்கு வந்த நாடகம்
இங்கு தான் காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சிக் காத்திருந்தது. சம்மந்தப்பட்ட பெண் கடத்தப்படவில்லை என்பது விசாரணையில் தெளிவானது. குற்றஞ்சாட்டிய பெண் ஆட்டோவில் ஏறி, அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கியுள்ளார். வீட்டில் ஏதோ பிரச்னை என்பதால், வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் அங்கேயேச் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது தான் அவருக்கு இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்ற யோசனை பிறந்துள்ளது.
அதற்கான காரணம், ஆட்டோ ஓட்டுநர் மீது அவருக்கிருந்த முன்பகை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த பெண், லேசாக ஆடைகளை களைந்து மயக்க நிலையில் இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இவை அனைத்தும் காவல் துறையினரின் விசாரணையிலும், மருத்துவமனை சோதனைக் குறிப்புகளிலிருந்தும் தெளிவானது.
பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், துரிதமாக இவ்வழக்கின் உண்மை நிலையைக் கண்டறிய உதவிய ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள், காவலர்கள் என அனைவருக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.