திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கருங்கல்பட்டியைச் சேர்ந்த செந்தில்முருகன் - ஐஸ்வர்யா தம்பதியின் 6 வயது மகள் தரனேஸ்வரி. இவர் உசிலம்பட்டி அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளியிலிருந்து அரசு பேருந்தில் தனது ஊருக்கு சென்றுள்ளார்.
கருங்கல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பெண் ஒருவர் ஓட்டி வந்த பல்சர் பைக் சிறுமி தரனேஸ்வரி மீது மோதியது. இதில் சிறுமி தரனேஸ்வரி பலத்த காயமடைந்தார். வலியால் அலறி துடித்த சிறுமியை அவரது உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தரனேஸ்வரிக்கு முகத்தில் 16 தையல் போட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் பல்சர் பைக்கை ஓட்டி வந்த பெண் வெல்லம்பட்டியை சேர்ந்த ரேவதி என்பதும் அவருடன் பைக்கில் வந்தது உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த லிங்கசாமி என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் மதுபோதையில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை செய்த போது இருவருமே குடிபோதையில் இருந்ததும், ரேவதி மது அருந்திவிட்டு விட்டு எனக்கு பைக் ஓட்ட ஆசையா இருக்கு, நான் ஓட்டுறேன் என்று லிங்கசாமியிடம் கூறியுள்ளார். உன் ஆசைய நிறைவேற்றுகிறேன் என கூறி இருவரும் போதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டியபோது சிறுமி மீது மோதியுள்ளனர்.
மது போதையில் ஜோடி ஓட்டி வந்த பைக் மோதி சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...