சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் வாக்கி-டாக்கி, சிசிடிவி, டிஜிட்டல் செல்போன்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தப் பணிகளுக்கான டெண்டரை, தமிழ்நாடு காவல் துறையில் உள்ள தொழில்நுட்பச் சேவைப் பிரிவு மேற்கொண்டது.
இந்நிலையில், டெண்டர் கொடுத்ததில் 300 கோடி ரூபாய்வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
குறிப்பாக, வி-லிங்க் என்ற நிறுவனத்திற்கு மட்டுமே அதிகளவில் டெண்டர் விடப்பட்டதில் தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தொழில்நுட்பப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் அன்புசெழியன், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உதயசங்கர், ரமேஷ் உள்பட 14 காவல் துறை அலுவலர்களின் இடங்களிலும், டெண்டர் எடுத்த வி.லிங்க் உள்பட இரண்டு நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
வெளியானது எஃப்.ஐ.ஆர்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, அதன் இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் தொழில்நுட்ப உபகரணங்கள் டெண்டர் முறைகேடு தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கின், முதல் தகவல் அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறை இணையத்தில் நீண்ட நாள்களாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பான முதல் தகவல் அறிக்கை நேற்றிரவு (ஆக. 20) வெளியாகியுள்ளது. குறிப்பாக, 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் டெண்டர் முறைகேட்டில் தொடர்புடைய 14 காவல் துறையினரின் விவரங்களும் வெளியாகியுள்ளன.
வழக்குப்பதிவு செய்யப்பட்டோரின் விவரங்கள்
- அன்புச்செழியன், தொழில்நுட்பப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்
- ரமேஷ், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்
- மோகன், காவல் ஆய்வாளர்
- தமிழரசன், காவல் ஆய்வாளர்
- மாரியப்பன், காவல் ஆய்வாளர்
- மைதிலி, காவல் ஆய்வாளர்
- லதா, ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் - தொழில்நுட்பப் பிரிவு
- ஞானமுருகன், காவல் ஆய்வாளர்
- உதய சங்கர், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்
- ஞானவேல், காவல் ஆய்வாளர்
- அஜீதா, காவல் ஆய்வாளர்
- தனபால், காவல் உதவி ஆய்வாளர்
- ஆண்டனி முத்து தங்கராஜ், காவல் ஆய்வாளர்
- ஜெயந்த், காவல் ஆய்வாளர்
என இரண்டு தனியார் நிறுவனம் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
மொத்தம் 120 (பி)- கூட்டுச்சதி, 465- போலி ஆவணம் பயன்படுத்துதல், 468- ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணம் தயாரித்தல், 471- போலி ஆவணத்தை உண்மை என உபயோகப்படுத்துதல், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிறுவனம்
முக்கியமாக, வி - லிங்க் என்ற நிறுவனம் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப உபகரணங்கள் தொடர்பான டெண்டர் முறைகேட்டில் மற்றொரு நிறுவனமும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
லுக்மேன் எலக்ட்ரோப்ளாஸ்ட் (Lookman Electroplast) என்ற நிறுவனமும் இந்த முறைகேட்டில் ஈட்டுபட்டுள்ளதால், அந்த நிறுவனத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிஐஜி அறிக்கை
இந்நிறுவனம், 308 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா செயல்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரத்தில் அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக தொழில்நுட்பப் பிரிவு டிஐஜி அளித்த அறிக்கையானது வழக்கின் முக்கிய ஆதாரமாக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொழில்நுட்ப கருவிகளில் மோசடி: தூசி தட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை