மதுரை: திருமங்கலம் பகுதியில் வசித்து வரும் அன்னபுஷ்பம் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் திருமங்கலம் விருதுநகர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றபோது, அவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறிய நபரொருவர் அவர்களது ஏடிஎம் கார்டை மாற்றி, அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்த ரூபாய் 57 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளார்.
அவர்கள் இருவரும் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அக்குறிப்பிட்ட ஏடிஎம்மில் பதிவான சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட, அந்த அடையாளம் தெரியாத நபரைத் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர்.
இச்சூழலில், அதே ஏடிஎம்மில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு நபரை அழைத்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலையம் கொண்டு சென்று அவரை விசாரித்தபோது அவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த தம்பி ராஜ் (44) என்பதும் ஏடிஎம்மில் நூதனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதேபோல் 2020ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அதே ஏடிஎம்மில் அன்னபுஷ்பம் என்பவரிடம் திருடியதும் இதே நபர் தான் என்பதும், தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஏடிஎம் மையங்களில் நூதனக் கொள்ளையில் இவர் தொடர்ந்து ஈடுபட்டதும் விசாரணையில் புலப்பட்டது.
இவர் மேலும் ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் தமிழ்நாடு முழுவதும் 23 இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதில் கிடைத்த பணத்தை பரிமாற்றுவதற்கு உதவியாகத் தேனி போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவா, மாரியப்பன் ஆகியோரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, அவர்களையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ரூபாய் 1.5 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.