திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே உள்ள மலையப்பன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மகன் சாமிதுரை (34). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாவும், பிறகு அந்தப் பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சாமித்துரையின் காதலியை மருது என்ற நபர் திருமணம் செய்து குடும்பம் நடத்திவந்த நிலையில், சாமித்துரைக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சாமித்துரைக்கும், மருதுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே தெருவில் வசித்துவந்ததால் இந்தப் பிரச்சினை அடிக்கடி நடந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 31) மருதும் அவரது நண்பரும் சேர்ந்து சாமிதுரையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வத்தலகுண்டு காவல் துறையினர் கூறுகையில், “கடந்த மூன்று நாள்களுக்கு மேலாகவே மலையப்பன்பட்டி கிராமப் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுவந்தது. இரு தரப்புமே ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 30) காவல் நிலையத்தில் மருது, சாமிதுரை இடையேயான குடும்பப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் அடிப்படையில் இன்று காலை விசாரணைக்கு இருதரப்பும் வந்துசென்றது.
பின்னர் மருது, அவரது நண்பர் இருவரும் இணைந்து சாமிதுரையை வத்தலகுண்டு உசிலம்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் பேக்கரிக்கு அழைத்துள்ளனர். அப்போது பேக்கரியின் உள்ளே அமர்ந்திருந்த சாமித்துரையை கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் உயிருக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோட முயற்சித்த சாமிதுரை, பேக்கரிக்கு வெளியிலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் ஆய்வுசெய்தார்” எனத் தெரிவித்தனர்.
தற்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மருது, அவருடைய நண்பர் உதயக்குமார் இருவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி: தொழில் போட்டி தகராறு - ஒருவரை தாக்கிய கும்பல்