சித்திபேட்: தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள தொகுடா மண்டலம் குடிகண்டுலா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா (19). இவருக்கும் துப்பாக்க மண்டல் சின்ன நிஜாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோனபுரம் சந்திரசேகர் (24) என்பவருக்கும் 2022ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் சியாமளாவுக்கு விருப்பம் இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்துள்ளார். ஏனெனில் சியாமளா ஏற்கனவே சிவக்குமார் (20) என்ற இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளார். இதையடுத்து சியாமளா ஏப்.19ஆம் தேதி உணவில் விஷம் வைத்து சந்திரசேகரை கொல்ல முயன்றுள்ளார்.
இதையறியாத சந்திரசேகர் உணவு ஒவ்வாமை என நினைத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஏப்.28 சந்திரசேகரை கோவிலுக்கு செல்லலாம் என இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தனியாக இருக்கலாம் என ஆள்ஆரவாரமற்ற காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றுள்ளார்.
அங்கு காதலன் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ராகேஷ், ரஞ்சித், சாய் கிருஷ்ணா ஆகியோர் தயாராக இருந்தனர். இதையடுத்து இவர்கள் நால்வரும் இணைந்து சந்திரசேகரின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். தொடர்ந்து, சந்திரசேகர் மாரடைப்பில் இறந்துவிட்டார் என சியாமளா நாடகம் ஆடியுள்ளார்.
இவரின் செய்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் காதலனுடன் இணைந்து கணவனை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஐவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் 25 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார்கள். இந்தக் கொலை தெலங்கானா மாநிலத்தை உலுக்கியுள்ளது.
இதையும் படிங்க: தங்கை கணவரை தீர்த்துக் கட்ட காத்திருந்தோம்- ஆணவப் படுகொலை கொலையாளிகள் திடுக் வாக்குமூலம்