சென்னை: வேளச்சேரி நர்மதா தெருவில் பணிக்குச்செல்லும் பெண்கள் பலர் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் பொதுவான கழிப்பறை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அந்த வீட்டின் கழிவறை அருகே இரு இளைஞர்கள் நின்று கொண்டிருப்பதைக்கண்ட சில பெண்கள் சந்தேகப்பட்டு அந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்து செல்போனைக் கேட்டனர்.
அப்போது அந்த இரு இளைஞர்களும் தங்கள் செல்போனில் இருந்தவற்றை அழித்ததால் அவர்கள் மீதான சந்தேகம் வலுத்தது. இதனால் வேளச்சேரி போலீசாருக்கு அப்பெண்கள் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச்சென்ற வேளச்சேரி போலீசார் அவ்விரு இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (38) மற்றும் ஸ்ரீராம் (29) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த செல்போன்களை வாங்கி போலீசார் ஆய்வுசெய்தபோது அதில் வீடியோக்கள் எதுவும் இல்லாததால், Recovery Softwareஐ பயன்படுத்தி ஆய்வு செய்தனர். அப்போது அவர்களது செல்போனில் பல பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் இருப்பதைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரே குடியிருப்பு வளாகத்தில் நிறைய வீடுகள் உள்ள நிலையில் அங்கு வசித்து வரும் பெண்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறையின் பின்புறமாக சென்று ஜன்னல் வழியாக குளிப்பதை வீடியோவாக எடுத்து, அவற்றை கூலி வேலைக்குச்செல்லும் நண்பர்களோடு பார்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 6 மாதங்களாக கழிப்பறையில் செல்போனை பொருத்தி பெண்கள் குளிப்பதை படம்பிடித்து வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். பின்னர் இவர்களை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் எடுத்த வீடியோ நண்பர்களோடு பகிரப்பட்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்தார்களா என்ற கோணத்திலும் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்,அந்த வீடியோக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் எடுத்த வீடியோவை வைத்து பெண்களை மிரட்டி பணப்பறிப்பில் அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோயிலில் ஆபாசப்படம் பார்த்த இளைஞர் தப்பியோட்டம்; போலீஸ் வலைவீச்சு