சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் பிரபலமான பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தொல்லைக்குள்ளான மாணவிகள் பலர் சமூக வலைதளங்களில் புகார்கள் தெரிவித்தனர். அதில், "ராஜகோபாலன் பல ஆண்டுகளாக இவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுத்ததார். ஆன்லைன் வகுப்பு எடுக்கும் போது ஆபாசமாக வருவார்" என தெரிவிருந்தனர்.
இப்புகாரின் பேரில், மடிப்பாக்கத்தில் இருந்த ஆசிரியர் ராஜகோபாலை அழைத்து சென்ற காவல்துறையினர், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணி வரை அவரிடம் நடந்த விசாரணையில், அவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், அப்பள்ளியில் உள்ள சில ஆசிரியர்களும் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப் பிரிவு, 354(ஏ) பாலியல் தொல்லை, பிரிவு 12 (ஜாமீன் கிடையாது) உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் அசோக் நகர் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர் .
தொடர்ந்து, எழும்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் வீட்டிற்கு ஆசிரியர் ராஜகோபாலன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தை நீதிபதியிடம் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அதனை விசாரணை செய்த நீதிபதி முகமது பரூக், ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜூன் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த பள்ளியில் மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் குழுவில் ராஜகோபலனும் ஓர் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.