திண்டுக்கல்: மெடிக்கல் மூலமாக மளிகைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
கரோனா தொற்று இரண்டாவது அலை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்றின் பரவலைத் தடுப்பதற்குத் தமிழ்நாடு அரசு, கடந்த மே 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், விவேகானந்த நகர் பகுதியில், அருகருகே மளிகைக் கடை, மெடிக்கல் ஷாப் இயங்கி வருகின்றன.
இங்கு நேற்று(மே.30) காலை மெடிக்கல் ஷாப்பிற்கும், மளிகை கடைக்கும் இடையே ஒரு கதவைத் திறந்து, அதன் மூலம் மளிகைப் பொருள்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, அப்பகுதியில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் கடையைச் சீல் வைக்க, இரண்டு மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், அங்கு கடை ஊழியர்கள் வெளியே வர மறுத்ததால் கடையை சீல் வைக்க முடியவில்லை.
பின்னர் ஒரு வழியாக மளிகைக் கடையில் உள்ள பணியாட்களை வெளியே அனுப்பிவிட்டு, இரு கடைகளுக்கும் இடையே உள்ள கதவை மூடி பெயரளவிலேயே சீல் வைத்தனர். மேலும் அக்கடையில் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்றிலிருந்து மீண்ட தொழில் அதிபர் கறுப்பு பூஞ்சையால் உயிரிழப்பு!