ராம்பூர் (உத்தர பிரதேசம்): அம்ரோகா கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட இரு குற்றவாளிகளில் ஒருவரான ஷப்னம் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷப்னம் தனது காதல் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர் சலீமுடன் சேர்ந்து குடும்பத்தினர் 7 பேரை கொடூரமான முறையில் கொலை செய்தார். அக்குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரின் கருணை மனுவை குடியரசு தலைவரும் நிராகரித்துள்ளார். உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே உறுதி செய்தது. தற்போது இவரை தூக்கிலிடுவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டவுடன் பவன் ஜல்லாட் என்பவரால் அது நிறைவேற்றப்படவுள்ளது. பவனின் குடும்பம், மூன்று தலைமுறைகளாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் வேலையை செய்து வருகிறனர். அவர்களிடமிருந்து ஒரு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான விவரங்களைக் கற்றுக்கொண்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் தூக்கு மேடைக்கு செல்லவிருக்கும் முதல் பெண்ணாக இருக்கிறார் கொலை குற்றவாளி ஷப்னம்.