சென்னை: மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (41). இவர் மாநகரப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காளிதாஸ் நேற்று மாலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக கொரட்டூரில் இருந்து பிராட்வே சென்ற 35 எண் கொண்ட மாநகரப் பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது ஜெர்மயா சாலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்தின் மேலே ஏறியபடியும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனால் புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், நடத்துனர் மூலம் போக்குவரத்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் பள்ளி மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிட்டு எச்சரித்து அனுப்பினர்.
அதனைத் தொடர்ந்து பேருந்து மீண்டும் புறப்பட்டு பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வந்து கொண்டிருந்தபோது பேருந்தில் ஓடி வந்து ஏறிய 4 மாணவர்களுள் ஒருவன் பேருந்து ஓட்டுநரான காளிதாஸ் கன்னத்தில் இருமுறை ஓங்கி அறைந்துவிட்டு அனைவரும் தப்பிச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
மாலை நேரம் என்பதால் போக்குவரத்து அதிகமாக காணப்பட்ட நிலையில் இச்சம்பவத்தால் சுமார் 15 நிமிடம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் உட்பட அனைவரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர்செய்தனர். அதனைத் தொடர்ந்து மாநகர பேருந்து ஓட்டுநர் காளிதாஸ் உட்பட ஊழியர்கள் 10 பேர் வேப்பேரி காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று காலை பேருந்தில் ஏறி அத்து மீறலில் ஈடுபட்ட தனியார் பள்ளி மாணவர்கள் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஓட்டுநர் காளிதாஸை தாக்கியது சென்னை டிம்லஸ் சாலை பகுதியைச் சேர்ந்த 19 வயதான 12 ஆம் பகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த மாணவனை கைது செய்த போலீசார் அவனுடன் வந்த அரசுப் பள்ளி ஆசிரியரின் மகன், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞரின் மகன் உட்பட 3 இளஞ்சிறாரை எச்சரித்து அனுப்பினர். கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற நீதிபதியின் பாதுகாவலர் தாக்குதல் விவகாரம் - தலைமறைவாக இருந்த இருவர் கைது