நீலகிரி: குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சந்தன மரம் உள்ளிட்ட அரசாங்கத்தால் வெட்ட தடை செய்யப்பட்ட வகை மரங்கள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் பேரூராட்சியில் நான்சச் சந்தக்கடை பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதியில் முள்வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட சந்தன மரத்தை சமூக விரோதிகள் வெட்டி கடத்தியுள்ளனர்.
மேலும், இதனருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் வனத்துறை சார்பில் எண்கள் எழுதப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இந்த பகுதிகளில் எத்தனை சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்பது குறித்து வனத்துறை ஆய்வு மேற்கொண்டும், கொலக்கம்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்தத் தொகுதியிலேயே சந்தன மரங்கள் வெட்டி கடத்துவது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.