ராமநாதபுரம்: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டை, சுறா பீலி உள்ளிட்டவைகளை ராமநாதபுரத்திற்கு சிலர் எடுத்து வருவதாக கடலோர காவல் குழும (MARINE) காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கீழக்கரை அருகே வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்ட பொழுது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
55 கிலோ கடல் அட்டை
அந்த வாகனத்தில் 30 கிலோ வீதம் 15 மூட்டைகளில் 450 கிலோ தடை செய்யப்பட்ட சுறா பீலி ( சுறா இறக்கை), ஐந்து வெள்ளை சாக்கு மூட்டைகளில் 250 கிலோ ஏலக்காய் ஆகியவை இருந்தன. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர் சதாம் உசேன் என்பவரை காவலர்கள் விசாரணை செய்தனர்.
இவை அனைத்தும் கீழக்கரையை சேர்ந்த காசிம் முகமது குடோனுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் அளித்தார். அதன்பின், காசிம் முகமது குடோனை காவலர்கள் சோதனை செய்தபோது அரசு தடை செய்யப்பட்ட, 55 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.20 லட்சம் மதிப்பு
காவலகர்களால் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடலோர காவல் குழும காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக கீழக்கரை பகுதியைச் சேர்ந்த காசிம் முகமது, முகமது மீரா சாகிப், சகாபுதீன் சாகிப், இம்ரான், சேதுக்கரை பகுதியைச் சேர்ந்த அகமது உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வில்வித்தை வீரரின் மூக்கை அறுத்த நபர்: தேடுதல் வேட்டையில் காவல்துறை