தென்காசி: சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரசிகாமணி பகுதியைச் சேர்ந்தவர் தர்மர் (58). இவருக்கும், இவரது மகன் இசக்கிமுத்துக்கும் (32) கடந்த சில மாதங்களாக சொத்து சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜூன்.26) இரவு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், திடீரென கோபம் அடைந்த அவரது மகன் இசக்கிமுத்து அரிவாளால் தந்தை தர்மரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த படுகாயமடைந்த இவரை உறவினர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கிருந்து தப்பி ஓடிய இசக்கிமுத்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரையும் மீட்டு ஒரே நேரத்தில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தந்தை இசக்கிமுத்து தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
இச்சம்பவம் குறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு