கோயம்புத்தூர்: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30), கூலித்தொழிலாளியான இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த அமுதா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகள் உள்ளார். கருப்புச்சாமிக்கும், அமுதாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர்.
உறவினருடன் திருமணம்
அமுதா திண்டுக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கருப்புச்சாமி தாசநாயக்கன்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கருப்புச்சாமி கடந்த 25 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நெகமம் அருகேயுள்ள ஜக்கார்பாளையத்தில் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அம்சவேணி (24) என்ற உறவினர் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
சென்ற ஜூன் 14ஆம் தேதி, கருப்புச்சாமி அம்சவேணியை அழைத்துச் சென்று பெதப்பம்பட்டியில் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அம்சவேணியின் பெற்றோர் கருப்புச்சாமியிடம் அவருடைய முதல் மனைவி அமுதாவிடம் விவாகரத்து செய்து கையெழுத்து வாங்கி வரச்சொல்லி உள்ளனர்.
மனவேதனையில் தற்கொலை
கருப்புச்சாமி அமுதாவிடம் சென்று கையெழுத்து வாங்கி வருவதாகக் கூறி சென்று உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அம்சவேணி நேற்று (ஜூன்.17) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சாணி பவுடரை கரைத்துக் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று உள்ளனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அம்சவேணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெகமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு: தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் காத்திருக்கின்றனர்.உதவிக்கு அழையுங்கள்:அரசு உதவி மையம் எண் - 104, சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060
இதையும் படிங்க: பெண்களுக்கிடையே கரண்டி சண்டை: வீடியோவால் ஒருவர் கைது!