சென்னை: மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வானகரம் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.
ரோந்து பணியில் இருந்த போலீசார், அவரை அழைத்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டபோது, பேண்ட் பாக்கெட்டில் பத்து பாக்கெட் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து 10 பாக்கெட்களில் சுமார் 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த சரத் (26) என்பது தெரியவந்தது.
இவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக வானகரம் மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வருவதாகவும், அன்னை சத்யா நகரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.