நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை கியூ பிரிவு காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் முஸ்தபா (55). முஸ்தபாவிற்க்கும் உதகை காந்தல் புது நகர் பகுதியைச் சேர்ந்த மார்கரேட் என்ற மாகி (53) என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
திடீரென கரேனாவில் மரணம்
இந்நிலையில் நேற்று (ஜுன் 24) மாலை மாகியை முஸ்தபா அழைத்து சென்றுள்ளார். நேற்று இரவு மாகி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து, இன்று (ஜுன் 25) காலை கரோனா தொற்றால் மாகி இறந்துவிட்டதாக கூறிய முஸ்தபா, அவரது உடலை காந்தல் பகுதிக்கு எடுத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் உறவினர்களிடம் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்யுமாறும் கூறிவிட்டு சென்றுள்ளார்.
உடலில் காயம்
மாகியின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று உடலை பார்த்தபோது முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர்.
பின்னர், உடனடியாக உதகை ஜி-1 காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மாகியின் வீட்டிற்கு சென்ற காவலர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைகாக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரகசிய விசாரணை
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதனிடையே உதவி ஆய்வாளர் முஸ்தபாவை பிடித்த காவலர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முழு விசாரணைக்கு பின்புதான் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் தெரிவித்துள்ளார். கொலை செய்த உதவி ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாகியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அடிக்கடி செல்போனில் பேசிய மனைவியை கொலை செய்த கணவர்