சென்னை: அண்ணா நகர் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் மீது முன்னாள் மாணவி பாலியல் தொந்தரவு புகார் அளித்ததன் பேரில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் தற்காப்புக்கலை பயிற்சிப் பள்ளி நடத்தி வருபவர், கெபிராஜ். இவர், கெருகம்பாக்கத்தில் உள்ள பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் பகுதிநேர கராத்தே பயிற்சியாளராகவும் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், இவர் வேறு சில பள்ளிகளிலும் பகுதிநேர ஆசிரியராக கராத்தே பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.
இவரிடம் கராத்தே பயிற்சி பெற வந்த முன்னாள் மாணவி ஒருவரிடம் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கும் போதும், பிற பள்ளிகளிலும், வெளி மாவட்டங்களில் நடைபெறும் தற்காப்புப் போட்டிகளுக்காக அந்த மாணவியை அழைத்துச் செல்லும் போதும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் அந்த மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கெபிராஜ்மீது பாதிக்கப்பட்ட மாணவி அளித்தப் புகாரின் அடிப்படையில், அவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைச் சட்டம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'உறங்க முடியவில்லை' பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து அஸ்வின் ட்வீட்!