ராமநாதபுரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (34) என்பவர் கோவையில் விளம்பர ஏஜென்சியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சமீபத்தில் பெரிய விளம்பரம் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக, பொள்ளாச்சி வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
மகிழ்ச்சியில் அருந்திய மதுவால்.. மரணம்
இதையடுத்து, ஸ்ரீகாந்த் நள்ளிரவில் தனது சொகுசு காரை எடுத்துக்கொண்டு, பொள்ளாச்சியிலிருந்து வடக்கிபாளையம் சாலையில் நண்பர்களுடன் சென்றுள்ளார். தொடர்ந்து, பொன்னாபுரம் பிரிவுவரை சென்றுவிட்டு, மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வந்துள்ளனர். அப்போது, காரை அதிவேகமாக ஓட்டியதில் வடக்கிபாளையம் பிரிவு மேம்பாலத்தில் கார் நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் பாலத்திலிருந்து 40 அடி பள்ளத்தில் கீழே விழுந்ததில் ஸ்ரீகாந்த் (34) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் காரில் சென்ற பொள்ளாச்சி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த கோபிநாத் (26), கோவை சபரிபாளையத்தைச் சேர்ந்த கவுன்சில் (26), ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன் (27) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
வீட்டின் சுற்றுச்சுவர் சேதம்
இவர்கள் மூன்று பேரும் சீட் பெல்ட் அணிந்திருந்த நிலையில், ஏர் பேக் ஓபன் ஆகியதில் உயிர் தப்பினர். ஆனால், ஸ்ரீகாந்த் மட்டும் சீட் பெல்ட் அணியாததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேம்பாலத்திலிருந்து கார் கீழே விழுந்த நிலையில், ஓய்வுபெற்ற ஆசிரியர் சண்முக சுந்தரம் என்பவரின் வீட்டு முகப்பில் கார் விழுந்தது. எனினும், அக்குடும்பத்தினர் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டின் சுற்றுச்சுவர் மட்டும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.