சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் கடந்த 12ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகளுக்குப் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கட்சியின் நிர்வாகிகளுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கி வந்தபோது கூட்ட நெரிசலில் 115ஆவது வட்டச் செயலாளர் வெங்கடேசன் பாக்கெட்டிலிருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் காணாமல்போயுள்ளது.
அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உடனடியாக ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் துறையினர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தொப்பி அணிந்த நபர் ஒருவர் வெங்கடேசனிடமிருந்து பணத்தைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
இதனை வைத்து அந்த நபர் சென்ற இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் அந்த நபர் வண்ணாரப்பேட்டை பகுதிக்குச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் விரைந்து ஒரு லட்சம் ரூபாய் திருடிய நபரான வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் (52) என்பவரைக் கைதுசெய்தனர்.
இவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்தனர். ஏற்கனவே பாஸ்கர் மீது வீடு புகுந்து திருடுதல் உள்பட மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் வழக்கில் 287 பக்க தீர்ப்பு சொல்வதென்ன?