விருதுநகர்: முத்தால் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் மாரீஸ்வரன்(32). இவர் கேட்டரிங் கல்லூரி நடத்தி வருகின்றார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருஞ்சுனை மாலா என்ற பெண்ணிற்கும் ஒன்றரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
இவ்வேளையில், தனது திருமண செலவிற்காகவும், கேட்டரிங் கல்லூரி நடத்துவதற்காகவும் தெரிந்தவர்களிடம் சுமார் ரூ.3.50 லட்சம் வரை கார்த்திக் கடனாக வாங்கியுள்ளார். சில நாட்களாக வாங்கிய கடனையும், அதற்கான வட்டியையும் செலுத்த முடியாமல் மன உளைச்சல் இருந்துள்ளார்.
கடன் கொடுத்தவர்கள் கடனைத் திரும்பக் கேட்டு தொந்தரவு செய்ததால் ,கடனை அடைக்க வழியின்றி தவித்து வந்த கார்த்திக், திருமணமாகி ஒன்றரை மாதமே ஆன நிலையில், தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தகவலறிந்த விருதுநகர் ஊரக காவல் நிலைய காவல் துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.