ஈரோடு: பெற்ற பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தும் மகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்தில் பெற்றோர் புகார் மனு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாவட்டத்தில் துணி வியாபாரம் செய்துவரும் நபர், இரண்டு திருமணம் செய்துகொண்டு, இரு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து வாழ்க்கை நடத்திவந்துள்ளார். முதல் மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில், கணவரின் இரண்டாவது மனைவியின் தோழி மீது தன் பாலின ஈர்ப்புக் கொண்டு முதல் மனைவி திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், முதல் மனைவி தான் திருமணம் செய்துகொண்ட பெண்ணுடன் சேர்ந்து குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
முடிவில் இரண்டு பிள்ளைகளையும் தாய் நரபலி கொடுப்பதாகக் கூறியதால், குழந்தைகள் பயந்து தங்களின் தாத்தா வீட்டிற்குத் தப்பிச் சென்று, நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.
உடனடியாக பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குப் பெண்ணின் பெற்றோர் சென்றுள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.