ஹைதராபாத் (தெலங்கானா): பல லட்சக்கணக்கான பணத்தை ஊழல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு பயந்து இடைத்தரகர் ஒருவர் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலெந்தகுந்தா தண்டா சர்பஞ்ச் ராமுலு என்பவர் வெல்டாண்டா மண்டல் பொல்லம்பள்ளியில் ஒரு ஆலையை நடத்த சுரங்கத் துறையிடம் அனுமதி கோரியிருந்தார். இதுதொடர்பாக வெல்தாண்டா தாசில்தாரைச் சந்தித்தபோது, இந்தக் காரியத்தை செய்ய, கல்வகூர்த்தி நகரில் வசிக்கும் வெங்கடையா கெளட் ராமுலு என்பவரை சந்திக்க பரிந்துரைத்துள்ளார்.
பணிகளை முடிக்க ராமுலுவிடம் ரூ.6 லட்சம் கெளட் கேட்டுள்ளார். இறுதியாக ஒப்பந்தம் ரூ.5 லட்சத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், ராமுலு இந்த வழக்கை ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார். அவர்கள் ஆலோசனையின் அடிப்படையில், ராமுலு கெளட்டின் வீட்டிற்குச் சென்று பணத்தை கொடுத்துள்ளார். இந்த திட்டத்தை வடிவமைத்த அலுவலர்கள் அடுத்த சில மணிநேரங்களில் கெளட்டின் வீட்டில் அதிரடி சோதனை நடத்த சென்றனர்.
ஆனால், அவர் கதவைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கதவை உடைத்து உள்ளே சென்ற அலுவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், தான் வாங்கிய பணத்தை கேஸ் அடுப்பின் மேல் வைத்து எரித்துள்ளார். அதனை அலுவலர்கள் மீட்டபோது, 70 விழுக்காடு அளவு பணம் எரிந்த நிலையில் இருந்துள்ளது. அனைத்தையும் கைபற்றிய ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள், இவருக்குச் சொந்தமான மேலும் பல இடங்களின் சோதனை நடத்தி வருகின்றனர்.
அலுவலர்களுக்கு பயந்து லட்சக்கணக்கான பணத்தை எரித்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.