சென்னை: தாம்பரம் காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட கண்ணகி நகர்ப் பகுதியில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து காவல் ஆணையர் உத்தரவின்பேரில், கண்ணகி நகர் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
பின்னர் காவல் துறைக்குக் கிடைத்த தகவலின் பேரில், நங்கநல்லூர் பி.வி. நகர்ப் பகுதியை சேர்ந்த மோஹித்(27) என்பவரை பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், மோகித் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கிண்டி தொழிற்பேட்டையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எல்எஸ்டி ஸ்டாம்ப் என்கிற போதை பொருளை விற்பனை செய்து வந்துள்ளார் எனத் தெரியவந்தது.
இதையடுத்து மோஹித்தை கைது செய்த தனிப்படை காவல்துறையினர், அவரிடமிருந்து ஐந்து போதை ஸ்டாம்புகளைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கண்ணகி நகர் காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்