திருநெல்வேலி: விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த ராஜநாராயணன் என்பவர் நிலம் வாங்குவது தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு திருநாவுக்கரசு, ராபர்ட், செந்தில் குமார், செங்கன், பட்டு, அரவிந்தன், ரவிச்சந்திரன் ஆகியோரை அணுகியுள்ளார். இவர்கள் ஏழு பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, திருநெல்வேலி நாங்குநேரியை அடுத்த வெங்கட்ராயபுரம் அருகேயுள்ள சடையநேரி கிராமத்தில், கிணற்று பம்ப் செட்டுடன் கூடிய 47 ஏக்கர் விவசாய நிலத்தை திசையன்விளை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமானது என்று கூறி, 40 லட்சம் ரூபாய்க்கு அந்த விவசாய நிலத்தை ராஜநாராயணனுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்த நிலத்தை ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால், பதிவுசெய்த பிறகும் அதற்கான ஆவணங்களை வழங்காமல் சார் பதிவாளர் லதா இழுத்தடித்து வந்துள்ளார். சந்தேகமடைந்த ராஜநாராயணன் இடத்தின் ஆவணங்களை மறுஆய்வு செய்தபோது, அந்த இடம் பிஏசிஎல் என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், அந்த நிறுவனம் மீது மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த நிறுவனத்தின் நிலங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன.
மேலும், அந்த நிறுவனத்தின் நிலத்தை விற்பனை செய்ய நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளதாகவும் அறிந்துள்ளார். அதாவது, சார்பதிவாளர், முருகன், மற்ற ஏழு பேரும் சேர்ந்து அந்த இடத்துக்கு போலி ஆவணங்களைத் தயார் செய்து ராஜநாராயணனுக்கு விற்றுள்ளனர். மேலும், அந்த நிலம் சிபிஐயால் தடை விதிக்கப்பட்ட நிலம் என்று அறிந்தும் சார் பதிவாளர் லதா, எட்டு பேருடன் சேர்ந்து மோசடியாக அதைப் பதிவு செய்துள்ளார்.
இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ராஜநாராயணன், ராதாபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டில் மார்ச் 18 அன்று புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, ராதாபுரம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்தச் சூழ்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சார் பதிவாளர் லதா உள்பட 9 பேர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யக்கோரி, ராதாபுரம் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், தற்போது சார் பதிவாளர் லதா மீதும், மேற்கண்ட 8 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் சார்பதிவாளர் லதா மீது பல்வேறு புகார்கள் ஏற்கெனவே காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் பணபலம், அதிகார பலத்தால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது சார் பதிவாளர் லதா, அந்தப் பகுதியைச் சேர்ந்த நில புரோக்கர் உடன் கூட்டு சேர்ந்து, பல்வேறு இடங்களை மோசடியாக பத்திரப்பதிவு செய்து, அதன்மூலம் லட்சக்கணக்கில் சட்டத்துக்குப் புறம்பாக சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அவர் மீது கடும் ஆதங்கத்தில் இருந்த சூழ்நிலையில், தற்போது ராஜநாராயணன் தொடர்ந்த வழக்கில் சார் பதிவாளர் லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, விரைவில் சார் பதிவாளர் லதாவை காவல் துறையினர் விசாரணைக்கு உட்படுத்துவார்கள் என்று தெரியவருகிறது.
மேலும் விசாரணைக்குப்பிறகு, சார் பதிவாளர் லதா உள்பட 9 பேரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அரசு பெண் அலுவலர் ஒருவரே புரோக்கர்களுடன் கூட்டுச்சேர்ந்து மோசடியாக தனியார் நிலத்தை பதிவு செய்து கொடுத்த சம்பவம் திருநெல்வேலியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சிபிஐ மூலம் தடை விதிக்கப்பட்ட இடத்தை சட்டத்திற்கு புறம்பாக பத்திரப்பதிவு செய்துள்ளதால் சார்பதிவாளர் லதாவிடம் சிபிஐ அலுவலர்களும், விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: குளத்தை சீரமைக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 5ஆம் வகுப்பு மாணவி கடிதம்!