ஈரோடு: குழந்தையைக் கொன்று தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரை சேர்ந்தவர் அருள் சிவக்குமார்(45). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் டி.என்.பாளையத்தை ஆறுமுகம் என்பவர் மகள் விஜயபிரியாவை (45) திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் துதி என்ற மகள் இருந்தார்.
விஜயபிரியா கடந்த ஆறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாததால், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் நான்கு வயது குழந்தைக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
இதனால் கடந்த சில நாள்களாகவே விஜயபிரியா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயபிரியா குழந்தைகளுடன் கடந்த இரண்டு வாரங்களாக டி.என்.பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.
இச்சூழலில், இவர் உணவு உண்ட பின் தூங்கச் சென்றவர், காலையில் மாயமாகியுள்ளார். நேற்று காலை பெற்றோர் விஜயபிரியாவை தேடிப் பார்த்தபோது, அவர் வீட்டின் அருகிலுள்ள சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தனது நான்கு வயது குழந்தையை கொன்று, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விஜயபிரியாவின் உடலை மேலே எடுத்து, அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். குழந்தையின் உடல் இன்னும் கிடைக்காததால், தேடும் பணியை காவல் துறையினர் முடிக்கி விட்டுள்ளனர்.