சென்னை: திருவொற்றியூர் கிராம தெருவை சேர்ந்த சுரேஷின் மனைவி விஜயலட்சுமி தனது மூன்று குழுந்தைகளுடன் செப்டம்பர் 15ஆம் தேதி திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரயிலில் பயணித்தார்.
திருவொற்றியூரில் இருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓடும் ரயிலில் விஜயலட்சுமி இருந்த பெட்டியில் ஏறிய அடையாளம் தெரியாத நபர், அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளார்.
உடனடியாக விஜயலட்சுமி சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட ரயில்வே காவல் துறை, கண்காணிப்பாளர் இளங்கோ உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தனிப்படை ஆய்வு
இந்நிலையில் சம்பவம் நடந்த திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தனிப்படை ஆய்வு மேற்கொண்டபோது வழிப்பறி, கொள்ளையர்கள் விட்டு சென்ற செருப்பு கிடைத்தது. மேலும், பழைய குற்றவாளிகளின் படங்களை விஜயலட்சுமியிடம் காண்பித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியில் அடிக்கடி செல்ஃபோன் பறிப்பில் ஈடுபடும் தினேஷ் என்கிற கிளி (19) செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக திருவொற்றியூர் பகுதிக்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், அங்கு கஞ்சா போதையில் இருந்த தினேஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விஜயலட்சுமியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை அவர் ஒத்துக்கொண்டார்.
தீவிர விசாரணை
அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் இருந்த ஏழரை சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் இளங்கோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "நகை பறிப்பு சம்பவம் நடந்த உடன் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடினோம். சம்பவத்தை சவாலாக ஏற்றுக்கொண்ட தனிப்படையினர் உடனடியாக செயல்பட்டு கொள்ளையனை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
பெண்கள் பயணங்களின்போது தாங்கள் அணியும் நகைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குற்ற சம்பவங்களை தவிர்க்க முடியும். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும்பட்சத்தில் காவல் துறை முழுமையாக மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்.
தற்போது ரயில்களில் கஞ்சா கடத்தல், ரேசன் அரிசி கடத்தல் போன்றவற்றை கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைத்து ரயில்வே காவல் துறையினர் பணியாற்றுகின்றனர்" என்றார்.