கரூர்: கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று (நவ. 19) மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இது சம்பந்தமாக வெங்கமேடு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி எழுதிய டைரிக் குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை உயிரிழந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.
மறு பிறப்பு எடுக்கணும்
அந்த குறிப்பில், "பாலியல் துன்புறுத்துதல் (Sexual Harassment) ஆள சாகுற கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும். தன்னை யார் இந்த முடிவை (தற்கொலை) எடுக்க வைத்தார்கள் என்பதை குறிப்பிட பயமாக இருக்கிறது. இந்த பூமியில் வாழ ஆசைப்பட்டேன். ஆனா, இப்ப பாதியிலேயே போறேன். இன்னொரு தடவை இந்த உலகத்தில வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும்.
பெருசாகி நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணனும்னு ஆசை. ஆனால் முடியலை. I love you Amma, Chithappa, Mama உங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, நான் உங்க கிட்ட எல்லாம் சொல்லாம போறேன் மன்னிச்சிடுங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது" என எழுதியுள்ளார்.
கரைந்த மருத்துவர் கனவு
மருத்துவப் படிப்பு மேற்கொள்வதற்காக தனியார் பள்ளியில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில், மாணவி ஆர்வமாக பங்கேற்று வந்துள்ளார். மருத்துவராகி சமூகத்திற்கு சேவை செய்வேன் என உறவினர்களை சந்திக்கும் போதெல்லாம் மாணவி கூறிவந்துள்ளார்.
மாணவிக்குப் பள்ளியில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா என்பது குறித்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பிரேதப் பரிசோதனை கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவுபெற்று ,அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்கும் நிறைவடைந்தது.
3 ஆசிரியர்கள் ஆப்சென்ட்
மாணவி படித்த பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் இன்று விடுமுறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஒருவர் மாணவிக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் எனவும்; அவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவியின் செல்போனில் 26 எண்கள் பிளாக் செய்யப்பட்டு இருந்ததாகவும், அவரது வாட்ஸ்-அப் உரையாடல்கள் அழிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது.
காவல் துறையினர், சைபர் கிரைம் பிரிவினரிடம் இதுகுறித்து விவரங்களை சேகரித்து வருவதாகவும், இந்த விவரங்கள் தெரிந்த பின்னரே மாணவியின் தற்கொலைக்குத் தொடர்பு உள்ளவர்கள் யார் என்பது தெரியவரும் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை
மாணவியின் தற்கொலை குறித்து அவரின் பெற்றோர்கள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புகார் வழங்கப்பட்ட காவல் ஆய்வாளரை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி டிஜஜி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரூரில் பள்ளி மாணவி தற்கொலை: பாலியல் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு!