விழுப்புரம்: கள்ளகுறிச்சி பள்ளி மாணவியின் மரண வழக்கில் ஜிப்மர் மருத்துவக் குழுவினரின் ஆய்வறிக்கையை கேட்டு மாணவி தரப்பினர் இன்று காலை 11 மணியளவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பின்னர் பேட்டியளித்த மாணவியின் தாயார், 'விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி அவர்களிடம் இரண்டு மணி நேரமாக மாணவிகள் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக செய்திகளைப் பார்த்து தெரிந்துகொண்டோம். மேலும் ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவிகள் யார் என்று தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்ததால் தான் அவர்கள் மாணவியின் தோழிகளா என்பது தெரியவரும். அப்படி தெரிவிக்கும் மாணவிகள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் பள்ளியைத் தற்போது திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளியை அவர்கள் திறக்க அனுமதிக்கக் கூடாது. பள்ளியை அரசே எடுத்து நடத்த வேண்டும் அல்லது சிறப்பு அலுவலர் மூலம் நடத்த வேண்டும்.
மேலும் மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை நெசலூர் கிராமத்திலிருந்து தன்னுடைய கணவருடன் நடந்தே சென்று முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளே’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணவி மரணத்தில் கொலைக்கான எந்த முகாந்திரமும் இல்லை என ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 10 நாட்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...சென்னை உயர்நீதிமன்றம்