சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் காய்கறி, மளிகை, எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கடைகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுகின்றனவா என அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இச்சூழலில், பூந்தமல்லியில் உள்ள நகைக்கடை ஒன்று கதவை மூடிவைத்து ரகசியமாக வியாபாரம் செய்து வருவதாக வந்தத் தகவலை அடுத்து, நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு சென்று சோதித்தனர். அப்போது விதிமுறைகளை மீறி அங்கு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு கடையை பூட்டி சீல் வைத்தனர். ஊரடங்கு காலத்தில் விதிமுறையை மீறி செயல்படும் கடைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கும் பணிகள் நடைபெறும் எனவும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.