சென்னை: சென்னை ஐஐடியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாணவி ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இவர் படித்து வந்த காலகட்டத்தில் நான்கு ஆண்டுகளாக அதே துறையில் படிக்க கூடிய மாணவர்கள், பேராசிரியர் என 9 பேர் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அது நான்கு பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தேப்சர்மா ஜாமீனில் உள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கிங்சோ தேப்சர்மவுக்கு மயிலாப்பூர் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். மயிலாப்பூர் போலீசார் அனுப்பிய சம்மனின் படி நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில் தான் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கு விசாரணைக்காக ஆஜராவதில் இருந்து 2 வார காலம் அவகாசம் அளிக்குமாறு சென்னை போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கிங்சோ தேப்சர்மாவின் கோரிக்கை குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - மேற்கு வங்கத்தில் ஒருவர் கைது