தர்மபுரி: உண்ட உணவுக்கு பணம் செலுத்தும்படிக் கோரிய உணவக ஊழியர்களைத் தாக்கிய நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் எதிரில் செல்லம் பட்டியைச் சேர்ந்த சேகர், நியூ பஞ்சாபி தாபா என்ற பெயரில் உணவகம் நடத்திவருகிறார். நேற்று (மார்ச் 16) மாலை சுமார் 5 மணியளவில் அரூர் பழைய பேட்டையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.
அவர்கள் கேட்ட அனைத்து உணவுகளையும் வழங்கிய பிறகு, உணவுக்கான தொகை ரூ. 500 கொடுங்கள் என்று ஊழியர் கேட்டபோது, “நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா, என்னிடமே பணம் கேட்கிறீர்களா?” என்று ஊழியர்களை மிரட்டும் தொனியிலும் தகாத வார்த்தையாலும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது வாக்குவாதமாக மாறி, பின்னர் கைகலப்பாக மாறியது. இதில், உண்ட உணவுக்கு பணம் தராத வாடிக்கையாளர் கடையில் இருந்த பணியாளர்கள், பெண்கள் உட்பட 5 பேர் மீது தாக்குதல் நடத்தினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அரூர் காவல் நிலையத்தில் வணிகர் சங்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அப்புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நேற்று ஆட்டோ சவாரி... இன்று சிக்கன் பிரியாணி... இடையில் வலிமை அப்டேட்' - வாகை சூடுவாரா வானதி?