வேலூர்: கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி காட்பாடியில் இருந்து வேலூர் செல்ல தனது ஆண் நண்பருடன் காத்திருந்த பெண் மருத்துவரை பயணிகள் ஆட்டோ என ஏமாற்றி, அதில் சிலர் ஏற்றிச்சென்றனர். மேலும், சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாலாற்றில் வைத்து ஆண் நண்பரை அடித்து கையை காலை கட்டிப்போட்டுவிட்டு, பெண் மருத்துவரை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், நகை, செல்ஃபோன் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல் துறையினருக்கு மின்னஞ்சல் மூலம் வரப்பெற்ற புகாரையடுத்து, வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதில், சத்துவாச்சாரியைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், கூலித்தொழில் செய்யும் பரத் (எ) பாரா, மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 கைது பேரைக் கைது செய்து போக்சோ, கடத்தல், வழிப்பறி உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், வேலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பெண் மருத்துவரை கடத்தி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 4 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் பரிந்துரைத்ததை அடுத்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு வழக்கில் கைதாகி, வேலூர் மத்திய சிறையில் உள்ள மணிகண்டன், சந்தோஷ்குமார், பார்த்திபன், பரத் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போட்டு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் விஷவாயு: மூன்று பேர் மரணம்