வதோரா (குஜராத்): வதோதரா நகரம் கலவரங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு நிலைமை எப்போது மோசமடையும் என்று கணிப்பது கடினம். இதுபோன்ற ஒரு சம்பவம் தீபாவளி அன்று இரவு பதற்றமான பனிகேட் பகுதியில் நடந்தது.
இந்த கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியாகவே கருதப்படுகிறது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. வதோராவில் நாளுக்கு நாள் கலவரக்காரர்களும், குற்றவாளிகளும் காவல்துறையைக் கண்டு அஞ்சாத நிலை உருவாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
அக்டோபர் 24 ல் நாடே தீபாவளி கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. அன்று இரவு வதோதராவின் பனிகட் பகுதியிலும் தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி கொண்டாட்டம் வன்முறையாக மாறும் என்று யாருக்குத் தெரியும். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, பனிகேட் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக இரு மதத்தவரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு விஷயம் ஓய்ந்து வழக்கம் போல் வியாபாரம் செய்து வந்தனர். தீடீரென்று தீபாவளியன்று இரவில் கல் வீச்சு தொடங்கியவுடன் தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன.
பனிகேட் பகுதியில் ஒரு பக்கம் இந்துக்கள், மறுபுறம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இங்கு இரு மதத்து மக்களும் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். ஆனால், தீபாவளியன்று இரவு திடீரென இரு மதத்தவரிடையே மோதல் ஏற்பட்டு கற்கள் வீசப்பட்டன. நிலைமை மிகவும் பதட்டமாக மாறியது, நகரின் பெரும்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சாலையில் வெகு தொலைவில் கற்கள் மட்டுமே தெரிந்தன. இதனால் போலீசார் சாலையில் இருந்த கற்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். மேலும், கலவரக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததால் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில், இரு பிரிவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் போலீசார் நள்ளிரவில் அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கட்டிடத்தில் இருந்து ஐபிஎஸ் யஷ்பால் ஜகனியா வை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அது அவரின் காலின் அருகில் விழுந்தது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். மேலும் போலீசாரின் சோதனையில் அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 பெட்ரோல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தீடிரென இவ்வளவு கற்கள் எங்கிருந்து வந்தன? பெட்ரோல் குண்டுகள் ஒவ்வொன்றாக எப்படி தயாரிக்கப்பட்டன? என்று சந்தேகித்த போலீசார் இந்த கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டதால் விசாரணை கடினமாகியுள்ளது. தீபாவளியன்று இரவு பனிகேட் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: மாமனாரின் கண்முன்னே மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்..!