சென்னை: சிதம்பரம் வட்டம், அண்ணாமலை நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர், மங்கை. இவரது கணவர் பாஸ்கர், சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலைபார்த்து வருகின்றார்.
இவர்களது மகன் விக்னேஷ்(22) பி.இ. மெக்கானிக்கல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றார். இந்நிலையில் பாஸ்கருக்கு அவரது நண்பர் மூலம் சென்னையைச்சேர்ந்த சசிகுமார், ஜெயகுமார் ஆகியோரது நட்பு கிடைத்தது. இதில் சசிகுமார் தன்னை ஐஏஎஸ் அலுவலர் என்று கூறிக்கொண்டதாகத் தெரிகிறது.
அப்போது சசிகுமார், உதவி ஆய்வாளர் பாஸ்கரிடம் உங்கள் மகன் விக்னேஷுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்குப்பணம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பாஸ்கர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மைலாப்பூரில் உள்ள உணவகத்தில் வைத்து சசிகுமார், ஜெயக்குமார் ஆகியோரிடம் மகன் வேலைக்காக 8 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் சசிகுமார் கூறியது போல வேலை வாங்கித்தராததால் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் பாஸ்கர், அவர்களிடம் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், அவர்கள் இதுவரை பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வந்ததால், அவரது மனைவி மங்கை அபிராமபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மோசடியில் ஈடுபட்ட சசிகுமாரை கடந்த 7ஆம் தேதி எஸ்ஆர்எம்சி போலீசார், டாக்டர் ஒருவரை மோசடி செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட போலி ஐஏஎஸ் அலுவலரான சசிகுமார் அதிமுக பிரமுகர்கள், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தனக்கு நன்கு தெரிந்தவர்கள் எனக்கூறி, ஏற்கெனவே பலரிடம் வேலை வாங்கித்தருவதாக பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!