சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள், வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளை தீவிர சோதனைகள் செய்தனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு பேர் வந்துள்ளனர்.
பின்னர் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் இரண்டு பேரின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் இருந்த இரண்டு அட்டை பெட்டிகளில் வீட்டு உபயோகப் பொருட்களான குக்கர், ஜூஸ் பிழியும் இயந்திரம், ஆவி பிடிக்கும் இயந்திரம், ஆகியவை இருந்தன.
அதனைக் கண்டு சந்தேகமடைந்த அலுவலர்கள், அதனை பிரித்து பார்த்தபோது அதனுள் தங்க உருளைகள், வளையங்கள், தங்க தகடுகள் இருந்தன.
இதையடுத்து சுமார் 4.03 கோடி மதிப்புள்ள 8.17 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியை திருடி விற்ற செவிலியிடம் விசாரணை