சென்னை: ஆள்மாறாட்டம் மூலம் போலியான ஆவணங்கள் தயார் செய்து நில அபகரிப்பு செய்த நான்கு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரை சேர்ந்தவர் அனிதா. கடந்த 2004ஆம் ஆண்டு குன்றத்தூரில் இரண்டு பிளாட்டுகளை தியாகராஜன் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார்.
மேற்கண்ட இடத்தை போலியான ஆவணங்கள் தயார் செய்து, கடந்த ஆண்டு மே மாதம் குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் செந்நீர்குப்பத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கும், கொளத்தூரை சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பவருக்கும் விற்பனை செய்திருப்பது போலி ஆவணம் தயார் செய்திருப்பது தெரியவந்த நிலையில், அனிதா அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக அனிதா காவல் ஆணையாளரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அனிதா வேலையின் காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்தபோது, கண்ணன் என்பவர் இடத்தை அடையாளம் காட்டி போலி ஆவணம் மற்றும் போலியாக நபர்களை தயார் செய்து ராஜேந்திர குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கியது தெரியவந்தது.
இந்த போலி ஆவணங்களை கொளத்துரை சேர்ந்த முகமது அசிமுதிள் மூலம் உருவாக்கி விற்பனை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் மூலம் தலா ரூ. 35 லட்சம் என மொத்தம் ரூ. 70 லட்சத்துக்கு இரண்டு இடத்தையும் அடமானம் வைத்து பணத்தையும் மோசடி செய்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ராஜேந்திர குமார், மணிவண்ணன், முகமது அசிமுதின், கண்ணன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன், கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த நில அபகரிப்பு விவகாரத்தில், தொடர்புடைய அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் யார் என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது