சென்னை: டிசம்பர் 6ஆம் தேதி முதல் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் பொருட்டு வாகனத் தணிக்கை, சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் குறித்தும், கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்தும் தமிழ்நாடு காவல்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.
கஞ்சா பறிமுதல்
கடந்த இரண்டு வாரத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 624 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.54 கோடி ரூபாய் மதிப்புடைய 1,516 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய 64 நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள் 340 கிலோ கஞ்சாவும், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் 300 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குட்கா பறிமுதல்
அதேபோல் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 4 ஆயிரத்து 333 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 ஆயிரத்து 443 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2.30 கோடி ரூபாய் மதிப்பிலான 20 டன் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தர்மபுரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 818 கிலோவும், சேலம் மாவட்டத்தில் 1,909 கிலோவும், தஞ்சை மாவட்டத்தில் 1,790 கிலோவும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குட்கா கடத்தலுக்குப் பயன்படுத்திய 48 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் குட்கா விநியோகம் செய்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபரான சுகேல் அகமது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்களும் உதவலாம்...
கடந்த இரண்டு வாரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தொடர்பான 232 வழக்குகளில் 275 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ. 28.48 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை பற்றிய விவரங்களை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் 100, 112 என்ற அவசர எண்களிலோ அல்லது அருகில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தோ காவல்துறைக்கு உதவலாம் என தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் அல்லது 94981-11191 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.