சென்னை: பள்ளிக்கரணை வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவருமான நாகூர் மீரான் (32) என்பவர் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3ஆவது தெருவில் தனது பெண் தோழியைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
நாகூர் மீரான், அவரது பெண் தோழியின் வீட்டில் இருப்பதை அறிந்த மற்றொரு ரவுடி கும்பல் ஐந்துக்கும் மேற்பட்டோர் பட்டப்பகலில் பட்டாக்கத்திகளுடன் வீடு புகுந்துள்ளனர்.
அங்கு பெண் தோழிகள் நான்கு பேருடன் பேசிக் கொண்டிருந்த நாகூர் மீரானை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனைக் கண்ட பெண் தோழிகள் அலறி அடித்துக் கொண்டு சாலையில் தலை தெறிக்க ஓடினர்.
இது குறித்து தகவலறிந்த ஆதம்பாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக,
- ரவுடி ராபின் (27)ராபின்
- பிரபாகரன் (26)
- விமல்ராஜ் (25)
- இருளா கார்த்திக் (26)
- காணிக்கைராஜ் (24)
உள்பட ஐந்து பேர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ஐந்து பேரிடம் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இந்த இருதரப்பும் கடந்த 10 ஆண்டுகளாக, ஆதம்பாக்கத்தில் ரவுடிகளாக வலம் வந்துகொண்டிருந்தனர். இரு தரப்பிலும் யார் பெரிய ரவுடி என்பது குறித்து கடும் போட்டி நிலவிவந்தது.
இவர்களுக்குள் கண்டிப்பாக மோதல் ஏற்படும் என்பதை உளவுத் துறை முன்பே தெரியப்படுத்தி இருந்தது. இருப்பினும் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
![ரவுடி நாகூர்மீரானை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04a-updateadhambakkam-murder-news-visual-script-7208368_15102021002853_1510f_1634237933_34.jpg)
காவல் துறை ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ஆதம்பாக்கத்தில் கொலைகள் தொடரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இதையும் படிங்க: ரூ.72 லட்சம் கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்த கொள்ளையன் கைது